வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஷம் குடித்துவிட்டு மனுகொடுக்க வந்த தொழிலாளி

மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்த தொழிலாளி மயங்கிவிழுந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Update: 2018-04-02 22:15 GMT
வேலூர், 

வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் மெய்கண்ணன், தொழிலாளி. இவர், நேற்று வேலூரில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும் வயிறு வலிப்பதாகக்கூறி அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பதாக தெரிவித்தார். உடனடியாக அவரை போலீசார் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வீடுகட்டி வருவதாகவும், அந்த வீட்டை அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் இடித்து சேதப்படுத்தியதாகவும், இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மதுவில் விஷம்கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம்குடித்துவிட்டு புகார்மனு கொடுக்கவந்த அவரால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுகொடுக்க வருபவர்களை கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் சோதனை செய்து அனுப்பினர்.

அப்போது ஒருவர் பையுடன் மனுகொடுக்கவந்தார். அவர் கொண்டுவந்த பையை போலீசார் சோதனை நடத்தமுயன்றனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பையை சோதனைசெய்தபோது அதில் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது.

அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அவர் வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்த சிவமூர்த்தி (வயது 47) என்பது தெரிந்தது. இவருக்கு சொந்தமான வீட்டுமனையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை அளப்பதற்காக நிலஅளவைத்துறையில் 2 முறை பணம் கட்டியும் வீட்டுமனையை அளக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அலமேலுமங்கை தாயார் ஆகியோர் அழைத்துச்சென்று கலெக்டரிடம் மனுகொடுக்கவைத்து, பின்னர் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்