காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முற்றுகை- சாலை மறியல்: தி.மு.க, உள்பட அரசியல் கட்சியினர் 135 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொள்ளாச்சி, வால்பாறையில் முற்றுகை, சாலை மறியல் நடந்தது. இது தொடர்பாக தி.மு.க. உள்பட அரசியல் கட்சியினர் 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-02 22:45 GMT
பொள்ளாச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில், பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் வெங்கட்ரமணன் வீதி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தபால் நிலைய வளாகம் முன் உட்கார்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நகர துணை செயலாளர் கார்த்திகேயன், கட்சி நிர்வாகிகள் இஸ்மாயில் ஆரூண், நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் பஞ்சலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு வந்த கிழக்கு போலீசார் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 25 பேரை கைது செய்து, நேரு திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இதேபோன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை ரோட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் முத்துமாணிக்கம், ஆனந்தன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செஞ்சேரிபுத்தூர் பழனிசாமி, தி.மு.க.ஒன்றிய செயலாளர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக கோவை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்டது. போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 65 பேரை கைது செய்து போலீஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

வால்பாறையில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் சார்பில் வால்பாறை காந்திசிலை பஸ்நிறுத்தம் அருகே வால்பாறை பொள்ளாச்சி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு தி.மு.க நகரகழக செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க நகரகழக செயலாளர் கல்யாணி, கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொறுப்பாளர்கள் பெரியசாமி,தனபாண்டியன், விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை அறிந்ததும், வால்பாறை சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பொள்ளாச்சி, வால்பாறையில் நடந்த போராட் டங்களில் தி.மு.க. உள்பட அரசியல் கட்சியினர் மொத்தம் 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்