கோடை சீசனுக்கு முன் கோத்தகிரி பகுதியில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோடை சீசனுக்கு முன் கோத்தகிரி பகுதியில் சுற்றுலா தலங்கள் மேம் படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2018-04-02 21:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் மலை பகுதியாக இருப்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை விவசாயத்தையே நம்பி உள்ளனர். இங்கு பல ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. தேயிலை தொழிலை நம்பி சிறு தேயிலை விவசாயிகளும், தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும், அவர்களை சார்ந்து தேயிலை தொழிற்சாலைகளும், தொழிற்சாலை தொழிலாளர்களும், வியாபாரிகளும் உள்ளனர்.

ஆனால் சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தேயிலை விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மலை காய்கறிகள் விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். மேலும் இங்குள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கும் வருமானத்தையே நம்பி வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சுற்றுலா தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண சமவெளி பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தெரியும் வகையில் மலைப்பாதை தொடங்கும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சுற்றுலா தலங்கள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் செல்ல வேண்டிய தூரம் மற்றும் வழிகள் குறித்தும் தகவல் பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகளை சுற்றுலா துறை சார்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அளிக்கப்படுவது இல்லை. இதனால் அங்குள்ள சுற்றுலா தலங்களை காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பலரும் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

கோத்தகிரியில் நேரு பூங்கா, ஜான் சல்லிவன் நினைவகம் மற்றும் பூங்கா, கோடநாடு காட்சி முனை, லாங்வுட் சோலை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, ரங்கசாமி மலை மற்றும் உயிலட்டி நீர்வீழ்ச்சி, சுண்டட்டி நீர்வீழ்ச்சி ஆகிய சிறந்த சுற்றுலா தலங்கள் என பல சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன.

இவற்றில் பல பகுதிகள் சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தி அனைவரும் அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் அறியாததால் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளை பார்த்துவிட்டு திரும்பி செல்கிறார்கள். வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்குவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஆபத்தான வளைவுகள் மற்றும் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகளாகும். இந்த சாலைகளில் சமவெளி பகுதிக்கு கீழ்நோக்கி செல்லும் வாகனங்களை இயக்கும்போது 2-ம் கியரில் இயக்க வேண்டும். அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கக்கூடாது. குஞ்சப்பனை முதல் கோத்தகிரி கட்டபெட்டு வரை உள்ள சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத ஆபத்தான வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகள் சில இடங்களில் உடைந்துள்ளதை புதுப்பிக்க வேண்டும். இவற்றை செய்வதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, ஆபத்தை உணராமல் செல்போன்களில் செல்பி எடுப்பது, தண்ணீரின் போக்கு தெரியாமல் நீர்நிலைகளில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க முறையான அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

இயற்கை அழகு ரசிக்க மட்டுமே ஆபத்தை தேடி செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் அமைய வேண்டும். சுற்றுலா தலங்களை மேம்படுத்த அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்