காவிரி பிரச்சினைக்காக போராட்டம்: கோவையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோவை மாநகரில் ஆங்காங்கே நடைபெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து கோவையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.;

Update: 2018-04-02 21:45 GMT
கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம், விமான நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், மத்திய கலால் அலுவலகம், வங்கிகள், தபால் அலுவலகங்கள் ரெயில்நிலையம் உள்பட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை முதல் மாலை வரை பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர். இரவில் மத்திய அரசின் அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவல் காரணமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று 3-வது நாளாக பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். பொதுமக்கள் யாரும் மைதானத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் கொடிசியா மைதானம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்