காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மதுரை ஐகோர்ட்டு அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க, மதுரை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2018-04-02 22:15 GMT
மதுரை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அ.தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. வணிகர் அமைப்புகள் இன்று முழு கடையடைப்பு நடத்துகின்றன.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தது. அப்போது மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் நீதிபதிகள் முன்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், கடந்த 31-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ந்தேதி (அதாவது இன்று) முதல் 5-ந்தேதி வரை அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே கோர்ட்டு தாமாகவே முன்வந்து போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் கோர்ட்டு தலையிட முடியாது” என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்