காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 132 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-04-02 23:00 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் காவிரி மீட்பு இயக்கம் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது காவிரி மீட்பு இயக்கத்தினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கே.கலைவாணன், வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், விவசாயிகள் சங்க நிர்வாகி வரதராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் பாண்டியன், நகர காங்கிரஸ் தலைவர் சம்பத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகமது ஹக், மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிர்வாகிகள் ஜெய்சிங், ராஜா, மக்கள் அதிகாரம் நிர்வாகி சண்முகராஜன் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

132 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதாக திருவாரூரில் இருந்து காரைக்காலுக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோல் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

திருவாரூரில் காவிரி படுகை வாழ் மக்கள் கூட்டமைப்பினர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தமிழர் தேசிய பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தி்ல் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்