தாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் மீட்பு

தாராபுரம் அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-02 22:15 GMT
தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் உடல் கிடப்பதாக தகவல் பரவியது. இது குறித்து உடனடியாக அப்பகுதியினர் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது அமராவதி ஆற்றின் நடுவே தண்ணீர் இல்லாத இடத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தீயில் உடல் கருகி அடையாளம் தெரியாத நிலையில் பிணமாக கிடந்தார். அந்த வாலிபர் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் பாலத்தின் கீழ் உள்ள தூண்கள் இருந்த இடத்தில் ஒரு துணிப்பையும், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மண்எண்ணெய் கேனும், அதன் அருகில் தீப்பெட்டி, 2 காலி மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினார்கள். அந்த துணிப்பையில் நல்ல துணிகளும், ரூ.2 ஆயிரம், குண்டடம் அருகே உள்ள மானூர்பாளையம் கோவிலின் விபூதி பிரசாத பொட்டலமும் இருந்தன. மண்எண்ணெய் கேன் திறந்த நிலையில் பாதி அளவு மண்எண்ணெயுடன் இருந்தது. கேன் இருந்த இடத்தின் அருகில் தரையில் மண்எண்ணெய் கொட்டிக்கிடந்தது தெரியவந்தது.

தீயில் உடல் கருகி இறந்து கிடந்த வாலிபர் திருப்பூரிலோ அல்லது அந்த இடத்தின் சுற்று வட்டார பகுதியிலோ தங்கி வசிப்பவராக இருக்கலாம். மது அருந்துவதற்காக அமராவதி ஆற்றுப்பாலத்தின் மறைவான இடம் தேடி நண்பர்களுடன் வந்திருக்கலாம். மது அருந்திய பிறகு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் காரணமாக உடன் வந்தவர்கள் அவரை கொலை செய்வதற்காக உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் அந்த வாலிபர் தன்னை காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை தேடி ஆற்றுக்குள் சென்ற போது பாதியிலேயே கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது அந்த வாலிபர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தனக்கு தானே உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்று தெரியவில்லை. அத்துடன் அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரமும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் தீயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்