கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல்: வாக்குச்சீட்டு பெட்டியில் ‘மை’ ஊற்றியதால் தேர்தல் ஒத்திவைப்பு
உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலின் போது வாக்குச்சீட்டு பெட்டியில் ‘மை’ ஊற்றியதால் பரபரப்பு நிலவியது. அத்துடன் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழுவுக்கு 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், தி.மு.க.வினர் 6 பேரும், பொது விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தரப்பினர் என்று கூறப்படும் 10 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் மொத்தம் 27 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர். தேர்தல் 2-ந்தேதி (நேற்று) நடைபெறும் என்ற நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு பட்டியல் சங்கத்தில் ஒட்டப்பட்டதால் பல வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த சங்கத்திற்கான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, அவர் அந்த பட்டியல் ஒட்டப்பட்டதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தேர்தல் திட்டமிட்டப்படி 2-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த அறிவிப்பு பட்டியல் (நோட்டீஸ்) அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலரான நாசர்அலி முன்னிலையில் தொடங்கியது. சங்க உறுப்பினர்கள் (வாக்காளர்கள்) 591 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். காலை 10.45 மணி வரை 102 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு சிலர் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர்.
அவர்களில் ஒருவர் ‘மை’யை வாக்குச்சீட்டு பெட்டியில் ஊற்றியதாக தெரிகிறது. இதன் காரணமாக வாக்குச்சீட்டு பெட்டியில் போடப்பட்டிருந்த வாக்குச்சீட்டுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வாக்குப்பெட்டி மீட்கப்பட்டது. வாக்குப்பெட்டியில் ‘மை’யை ஊற்றியவர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நிலவிய சூழ்நிலை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு அந்த சங்க கட்டிடத்தில் (வாக்குப்பதிவு நடந்த கட்டிடம்) தேர்தல் நடத்தும் அதிகாரியால் எழுதி ஒட்டப்பட்டது. அத்துடன் அந்த கட்டிடத்தின் கதவுகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தெரியாத சிலர் பிற்பகலில் வாக்களிக்க அங்கு வந்தனர். ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் திரும்பி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி நாசர்அலி உடுமலை போலீசில் புகார் கொடுத்தார். அதில் அசாதாரண சூழ்நிலை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.