ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் 50-வது நாளாக போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் 50-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 50-வது நாளாக இவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் மல்லிகா தலைமையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் மற்றும் சங்கத்தினர் அ.குமரெட்டியபுரம் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் அ.குமரெட்டியபுரம் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆம்ஆத்மி கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் அ.குமரெட்டியபுரம் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
நடிகர் இமான் அண்ணாச்சி கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், நான் நடிகராக இங்கு வரவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக வந்து உள்ளேன். எனது சொந்த ஊர் ஏரல். இந்த ஆலையின் பாதிப்பு எனக்கும் சேர்ந்ததுதான். 50 நாட்களாக போராடி வரும் உங்கள் போராட்டத்துக்கு விரைவில் ஒரு உறுதியான நல்ல தீர்வு கிடைக்கும். இந்த போராட்டத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நானும் மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறேன் என்றார்.
புரட்சி பாரதம் கட்சி மாநில செயலாளர்கள் ருசேந்திர குமார், பரணி மாரி, குட்டி ஆகியோர் தலைமையில் கட்சியினர் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.