4 முதியவர்களிடம் நகை பறித்த பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது
4 முதியவர்களிடம் நகை பறித்த பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்து, 15 பவுன் நகையை மீட்டார்கள்.
கடத்தூர்,
கோபி பச்சமலை ரோட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 63). இவர் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று ஸ்ட்டரை மறித்து கத்தியை காட்டி காளியப்பன் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்து விட்டு சென்று விட்டார்.
இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த முதியவர் குருசாமியிடம் 1 பவுன் மோதிரம், சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமியிடம் (64) 1 பவுன் மோதிரம், புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூரை சேர்ந்தவர் செல்லப்பன் (77) என்பவரிடம் ¾ பவுன் மோதிரத்தை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுவிட்டார்.
முதியவர்களை குறிவைத்து நடந்த இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கோபி கொளப்பலூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்தார். அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையத்தை சேர்ந்த அப்துல்சலீம் (52) என்றும், அவர்தான் கோபி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் 4 முதியவர்களிடம் நகை பறித்தது என்றும் தெரியவந்தது. மேலும் அப்துல்சலீம் கடந்த 2016-ம் ஆண்டு பல வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தவர் என்பதும், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட போலீஸ் நிலையங்களில் அவர் மீது பல வழக்குகள் இருப்பதும், அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அப்துல்சலீமை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 பவுன் நகையையும் மீட்டார்கள். பின்னர் கோபி முதல்வகுப்பு மாஜிஸ்திரேட்டு பாரதி முன்பு ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தார்கள்.