சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாளை கொண்டாடினார்

‘நடமாடும் கடவுள்’ என அழைக்கப்படும் சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2018-04-01 23:17 GMT
துமகூரு,

துமகூருவில் சித்தகங்கா மடம் உள்ளது. அந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவக்குமார சுவாமி. நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் அவர் நேற்று 111-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான மடாதிபதிகள் நேரில் வந்து சிவக்குமார சுவாமியிடம் ஆசி பெற்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று மடத்திற்கு வந்து சுவாமியிடம் ஆசி பெற்றனர். மடத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை நிர்வகிக்க 500 ஆசிரியர்கள் மற்றும் 1,500 மாணவர்கள் குழு தனித்தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசலை தடுக்க சித்தகங்கா மடத்திற்கு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பிறந்த நாளையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் சிவக்குமார சுவாமிக்கு குருவந்தனா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி 111 தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் மைசூரு சுத்தூர் வீரசிம்மாசன மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி கலந்து கொண்டு பேசியதாவது.

ஏழைகளுக்கு உதவியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியையும் சிவக்குமார சுவாமி அளித்து வருகிறார். இது அவருடைய மிகப்பெரிய சாதனை ஆகும். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சிவக்குமார சுவாமியின் சேவை பற்றி பேசப்படுகிறது. சித்தகங்கா மடத்தின் பொறுப்பை சிவக்குமார சுவாமி ஏற்று 88 ஆண்டுகள் ஆகின்றன. அன்று முதல் தொடர்ச்சியாக சேவையாற்றி வருகிறார்.

நாம் ஒவ்வொருவரும் நமது ஆயுளில் ஒரு நிமிடத்தை வழங்கினால் சிவக்குமார சுவாமி இன்னும் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து ஏழை மக்களுக்கு சேவை ஆற்றுவார். நாம் 100 ஆண்டுகள் வாழ்வோம் என்று கனவில் கூட நினைக்க முடியாது. யாரும் செய்ய முடியாத அத்தகைய சாதனையை சிவக்குமார சுவாமி செய்துள்ளார். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். இவ்வாறு சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி பேசினார்.

மேலும் செய்திகள்