ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் பேட்டி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார்.

Update: 2018-04-01 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி அ.குமரெட்டியபுரம் பகுதி மக்கள் நேற்று 49-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று காலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.

போராட்டம் வெற்றிபெறும்

அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. நிலத்தடி நீர் மாசு பட்டு உள்ளது. மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நீங்கள் போராடி வருகிறீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன். இந்த ஆலையை தமிழ்நாடு அரசு நினைத்தால், மாசுகட்டுப்பாட்டு வாரியம் நினைத்தால் தடை செய்ய முடியும். ஆனால் அவர்களுக்கும் ஒரு விலை உண்டு. இதனால் அவர்கள் ஆலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும். உங்கள் அனைத்து போராட்டத்துக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். வெற்றி விரைவில் கிடைக்கும்’ என்று கூறினார்.

பின்னர் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 49 நாட்களாக குமரெட்டியபுரம் மக்கள் போராடி வருகின்றனர். தங்கள் எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும் என்று உறுதியாக போராடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் போராட்டகளமாக உள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் அனைத்து தொழிற்சாலைகளையும் இங்கு கொண்டு வருகிறது.

நிரந்தரமாக மூட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கிறது. தற்போது 3 மாதம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளது. இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகள் எதுவும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். மக்கள், தமிழர் நலனுக்காக போராட வேண்டும். இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென்மண்டல தலைவர் அரசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் விஜய்மாரீஷ், தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் ரூஸ்வெல்ட், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரதீப், தமிழ்நாடு நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் சதீஷ், தூத்துக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்