கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.

Update: 2018-04-01 22:30 GMT
சிவகாசி,

சிவகாசியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தின் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், துணை பொதுச்செயலாளர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் மணிவாசகன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் 1.6.2009 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை சரி செய்யாமல் புதிய ஊதியக்குழு நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது. பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில் முகாம் அலுவலர்களாக மேல்நிலைக் கல்வியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றுபவரையோ அல்லது மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களையோ முகாம் அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.

மாவட்டம் தோறும் ரூ.5 கோடி செலவில் அனைத்து வசதிகள் கொண்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைத்திட வேண்டும். கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்தியதற்கான நிலுவைத்தொகையினை வழங்கிட வேண்டும். அரசு அலுவலர்களுக்கு தருவது போல ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ளது போல இரண்டு தாள்களுக்கு பதில் வருகிற கல்வியாண்டு முதல் ஒரு தாளாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் கூறுகையில், வருகிற 12-ந்தேதி முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன்னர் அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விடைத்தாள் திருத்தும் முதல் 3 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார். 

மேலும் செய்திகள்