காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அந்த கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்றுகாலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், துணைச்செயலாளர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.