ரெயில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது

திருவள்ளூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-01 22:15 GMT
திருவள்ளூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுகேந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஆவடி நாகராஜன், நிர்வாகிகள் குமரன், பரந்தாமன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திடீரென அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 55 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்