காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட 209 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 209 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-01 23:00 GMT
திருவெறும்பூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதை உடனடியாக அமைக்க கோரியும் தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டாமென துண்டு பிரசுரம் வழங்கினர். மேலும் சுங்ககட்டணம் வசூலிக்கவிடாமல் தடுத்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் அன்புவெங்கடேஷ், காவிதாசன், அண்ணாதுரை உள்பட 70 பேரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.

திருப்பராய்துறை

இதேபோல் திருப்பராய்துறை சுங்கச்சாவடியில் நேற்று மதியம் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட அவைத்தலைவர் பரத் தலைமையில் 19 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, பெட்டவாய்த்தலை சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி மற்றும் போலீசார் 19 பேரையும் கைது செய்து பெட்டவாய்த்தலையில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

சமயபுரம்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரியலூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வரிகொடா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதில் மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ், மாநில துணை பொதுச்செயலாளர் பழ.ராஜா, மாநில மாணவரணி துணைச்செயலாளர் அண்ணா.பகுத்தறிவாளன் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டு சமயபுரத்தில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்