வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

பின்னர் வேல்முருகன் மற்றும் அந்த கட்சியினர் சுங்கச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-01 21:30 GMT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் அருகே காலை 11 மணிக்கு அக்கட்சியினர் ஒன்று திரண்டனர். அப்போது சுங்கச்சாவடி மையத்துக்கு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன் வந்ததும், அவரது ஆதரவாளர்கள் சுங்கச்சாவடி மையத்தை அடித்து நொறுக்கினர்.

பின்னர் வேல்முருகன் மற்றும் அந்த கட்சியினர் சுங்கச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட 300 பேரை கைது செய்து, உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலர் வேல்முருகன் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய 11 பேரை தவிர அனைவரையும் விடுதலை செய்வதாக கூறினார்.

இதையடுத்து வேல்முருகன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விடுவிக்கப்பட்டனர். 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மறியலில் ஈடுபட்டவர்களும், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி மையத்தை நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு, அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தமிழ்வாணன், செந்தில், அருட்செல்வன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனே போலீசார், அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். முற்றுகை போராட்டம் குறித்து போலீசார் ஏற்கனவே சுங்கச்சாவடி நிர்வாக அதிகாரிகளிடம் எச்சரித்தனர். இருப்பினும் சுங்கச்சாவடி நிர்வாகம் ஊழியர்களை பணியில் அமர்த்தியதால், தான் ஊழியர்கள் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாக சக ஊழியர்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் செய்திகள்