மாதவரத்தில் அடுக்குமாடி பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரம்

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை மாதவரத்தில் அடுக்குமாடி பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Update: 2018-04-01 22:45 GMT
செங்குன்றம்,

சென்னை கோயம்பேட்டில் மாநகர பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் செல்ல மிகப்பெரிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

மாதவரம் பகுதியில் சென்னை பெருநகர குழுமத்தின் கனரக வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இதன் அருகில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது இந்த அடுக்குமாடி பஸ் நிலையம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இரவும், பகலுமாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கீழ்தளத்தில் 300 பஸ்களும், மேல்தளத்தில் 300 பஸ்களும் நிறுத்தும் அளவுக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, ஸ்ரீகாளாஸ்தி, பிச்சாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் கோயம்பேட்டுக்கு செல்லாமல் மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதனால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதுடன், பயண நேரமும் மிச்சமாகும்.

மேலும் இங்கிருந்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்பட இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் செல்லும் பஸ்களும் இங்கிருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் நவீன வசதிகளுடன் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓய்வு அறைகள், கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தும் இடங்கள், பயணிகளுக்கு இருக்கைகள், கழிப்பிடங்கள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. டீ கடைகள், ஓட்டல்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்திலேயே முதல் முறையாக கட்டப்பட்டு வரும் இந்த அடுக்குமாடி பஸ் நிலையம் அடுத்த மாதம் திறக்க வாய்ப்புள்ளதாகவும், பஸ் நிலையத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்