திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்துக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். மோட்டார் பழுதை நீக்கி குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு, ம.மூ.கோவிலூர்– பில்லமநாயக்கன்பட்டி சாலையில் அமர்ந்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி 3 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.