கவுந்தப்பாடி அருகே விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் படுகாயம்

கவுந்தப்பாடி அருகே விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-04-01 20:30 GMT

கவுந்தப்பாடி,

பவானி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இளங்கோ (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் கோபியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்று பவானிக்கு காரில் வந்துகொண்டு இருந்தார். கவுந்தப்பாடி அருகே பவானி ரோட்டில் உப்புக்காரபள்ளம் என்ற பகுதியில் கார் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அப்போது காரின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததால், மோதாமல் இருப்பதற்காக காரை இளங்கோ திருப்ப முயன்றார்.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவருடைய மனைவி குணலட்சுமி(35), மகள் சுவேதா(15), மகன் விஸ்வாகர்(5) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்த ராசுக்குட்டி (27), ஜோதீஸ்வரன் (25) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இளங்கோ மற்றும் அவருடைய குடும்பத்தினர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ராசுக்குட்டி, ஜோதீஸ்வரன் ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்