அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த தொழிலாளி கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-01 21:30 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகணபதி கோவில் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சசிக்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் பார்வதியிடம் உங்களுடைய 2 மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், பார்வதியிடம் ரூ.14 லட்சம் தந்தால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் அதிகாரி வேலை வாங்கிவிடலாம் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய பார்வதி ரூ.14 லட்சத்தை சசிக்குமாரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்வதி, திருச்செங்கோட்டில் உள்ள சசிக்குமார் வீட்டுக்கு சென்றார். அப்போது சசிக்குமார் மற்றும் அவருடைய உறவினர்கள், பார்வதியை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பார்வதியிடம் இருந்து வாங்கிய ரூ.14 லட்சத்தை தரமுடியாது என்றும் கூறி உள்ளார்கள்.

இதுகுறித்து பார்வதி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சசிக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்