தாய்மைக்கு அங்கீகாரம்

பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது அதில் தந்தை அல்லது கணவர் பெயரை குறிப்பிடுவது நடை முறையில் இருக்கிறது.

Update: 2018-04-01 05:55 GMT
பெண்கள் வாகன ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது அதில் தந்தை அல்லது கணவர் பெயரை குறிப்பிடுவது நடை முறையில் இருக்கிறது. ஓட்டுனர் உரிமத்திலும் கணவர் அல்லது தந்தையின் பெயர் அச்சிட்டு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் டெல்லி மாநில போக்குவரத்து துறை தந்தைக்கு பதிலாக தாயார் பெயரையும் இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது. விண்ணப்ப படிவத்தில் தாயாரின் பெயரையும் இடம்பெற செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் போக்குவரத்து துறை சார்பில் எடுக்கப்படும் மிகப்பெரிய முயற்சி இது. இந்த மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சில காரணங்களால் தந்தை பெயரை குறிப்பிட விரும்பாதவர்களுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். இந்த மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஏற்ப மென்பொருளை மாற்றியமைத்து வருகிறோம். விரைவில் மென்பொருள் மாற்றங்கள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார்.

நிரந்தர ஓட்டுனர் உரிமத்தில் தாயாரின் பெயரை இடம்பெற செய்வதன் மூலம் அது முக்கிய அடையாளச் சான்றாகவும் மாறும். இந்த மாற்றம் உண்மையில் தாய்மைக்கான அங்கீகாரமாக அமையும் என்பதும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

டெல்லியில் 13 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தினமும் ஏறக் குறைய 1600 ஓட்டுனர் உரிமங்கள் வினியோகிக்கப்படுகின்றன. வருடத்திற்கு நான்கு லட்சம் பேர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தகுதி பெறு கிறார்கள். பல்வேறு காரணங் களால் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

‘‘இந்தியாவில் ஓட்டுனர் உரிமத்தில் தாயார் பெயரை இடம்பெற செய்யும் முதல் மாநிலம் என்ற சிறப்பை டெல்லி பெற உள்ளது’’ என் கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் செய்திகள்