காணாமல் போன நிலா - சுபா

அந்த உயரமான கம்பத்தை நோக்கி அருண்- பூர்ணிமா இருவரும் கைகோத்து நடந்தபோது, ஷீலாவும் உடன் நடந்துவந்தாள்.

Update: 2018-04-01 05:52 GMT
ந்த உயரமான கம்பத்தை நோக்கி அருண்- பூர்ணிமா இருவரும் கைகோத்து நடந்தபோது, ஷீலாவும் உடன் நடந்துவந்தாள்.

கம்பத்தின் அடியில் இணைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவர்கள் அமர்ந்தார்கள். இருவருடைய உடல்களும் பாதுகாப்புக்காக நாற்காலிகளுடன் வலிக்காதவண்ணம் கட்டப்பட்டன.

ஷீலா புன்னகையுடன் பேசினாள்: “மேல போகப்போக, கொஞ்சம் ரத்த அழுத்தம் ஏறும். ஆனா, பயப்படாதீங்க..! எந்தக் கட்டத்துலயாவது பயமா இருந்தாலோ, உடம்பு தாங்காதுன்னு தோணற அளவுக்கு மாற்றம் இருந்தாலோ, ஆட்டத்துலேர்ந்து வெளில வரலாம். இதோ இந்த பொத்தானை ஒரு அழுத்து அழுத்துங்க.. எங்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். உடனே நிறுத்தி, நிதானமா இறக்கிவிடுவோம்..”

அவர்களுடைய கண்களைக் கட்ட கறுப்பு ரிப்பன் எடுக்கப்பட்டதும், “ஏன் கண்ணைக் கட்டறீங்க..?” என்று கேட்டாள் பூர்ணிமா.

“உங்க நல்லதுக்காகத்தான். கண்ணைத் திறந்து கீழ பார்த்தா, சில பேருக்கு தலைசுத்தும். பயம் அதிகமாகும். குறிப்பா நீங்க வேகமா விழற மாதிரி இறங்கும்போது, கீழ பார்த்தா, இதயமே நின்னுடற மாதிரி இருக்கும். கண்ணைக் கட்டிட்டா, அந்த பிரச்சினையெல்லாம் இருக்காது..”

அருண்- பூர்ணிமா இருவரும் அவரவர் பக்கத்தில் இருந்த கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.

“ஞாபகம் வெச்சுக்கங்க.. நீங்க ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுக்காத வரைக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம். ஆல் த பெஸ்ட்..!” என்று ஷீலாவின் குரல் தேய்ந்தது.

ஒரு பீப் ஒலி கொடுத்துவிட்டு, இயந்திரம் இயங்கியது. அவர்கள் அமர்ந்திருந்த இருக்கை அந்த கம்பத்தின் மீது உயர ஆரம்பித்தது. கிணற்றிலிருந்து தண்ணீர் நிரம்பிய வாளியை இழுப்பது போல் மேலே மேலே இழுக்கப்பட்டு, இரண்டடி இரண்டடியாக அவர்கள் உயர்த்தப்பட்டார்கள்.

மேலே ஏற, ஏற, காற்று பலமாக வீசியது. அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையே அந்த வேகத்தில் சற்று நடுங்கி அதிர்ந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருக்கை மேலே மேலே ஏறிக்கொண்டே போனதே தவிர, இறங்குவதாகத் தெரியவில்லை.

“ஏய், ரொம்ப உசரத்துக்கு கூட்டிட்டு போய் அங்கேர்ந்து கீழ போடப்போறாங்களா..?” என்று பூர்ணிமா கவலையுடன் கேட்டாள்.

“எப்பவுமே எனக்கு தைரியம் குடுக்கறவ நீ..! இப்ப எதுக்கு நீ பயப்படறே..?”

“அப்படியில்ல அருண்..! இயந்திரத்துல ஏதாவது கோளாறு நடந்து எக்குத்தப்பா விழுந்தோம்னா..?”

“இந்த மாதிரி நினைப்பெல்லாம் உனக்கு ஏன் வருது..?”

“ஒரு பேச்சுக்காகத்தான் கேக்கறேன்.. அப்படி ஏதாச்சும் நடந்தா, அடுத்த ஜென்மத்துலயும் என்னையே லவ் பண்ணுவியா..?”

அருண் பதில் எதுவும் சொல்லும் முன், திடீரென்று அவிழ்த்துவிட்டது போல் அவர்கள் இருக்கை வேகமாக வழுக்கிக்கொண்டு இறங்கியது. தண்ணீர் இறைப்பதற்காக காலி வாளியை கிணற்றுக்குள் இறக்கும் வேகத்தில் அது இறங்கியது. ரத்தம் முழுமையான வேகத்துடன் மண்டைக்குப் பாய்ந்தது. காதுகள் அடைத்துக்கொண்டன. பூர்ணிமா அவளை மீறி பெரும் குரலெடுத்து அலறினாள்.

சடக்கென்று இருக்கை சடன் பிரேக் போட்டது போல நின்றது. அந்த குலுக்கலில் மார்புக்கூட்டுக்குள் இதயமே குலுங்கியது. மீண்டும் இருக்கை கிர்ரக் கிர்ரக் என்று சப்தித்துக்கொண்டு, மேலே எழும்ப ஆரம்பித்தது.

“ஏய், ரொம்ப பயந்துட்டியா..?”

“ஆமாம் அருண்.. ஒரு நிமிஷம் பட்டனை அழுத்தி நிறுத்திடலாமானுகூட தோணிடுச்சு..”

“சரி.. உனக்கு ரொம்ப பயமா இருந்தா, நாம விலகிப் போம்.. பரிசைவிட நீ எனக்கு முக்கியம், பூர்ணிமா..”

“நோ..!” என்றாள் பூர்ணிமா. அவள் குரலில் கூடுதலான உறுதி இருந்தது. “இப்ப வாக்கு குடுக்கறேன். இனிமே நான் அலற மாட்டேன்.”

இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் கூடுதலான வேகத்துடன் கீழே விழுவது போல இறங்கியபோதும், பூர்ணிமா உதடுகளை இறுக மூடி, தன் அலறலை அடக்கினாள்.

அருணுக்குச் சற்றே தலைசுற்றியது. அவனும் நாற்காலியின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு மனதுக்குள் அவனுக்குத் தெரிந்த பிரார்த்தனைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஒருவழியாக இருக்கை கடைசியாகக் கீழே இறங்கி, நிறுத்தத்துக்கு வந்தது.

அந்த நிமிடத்தில் அருண், பூர்ணிமா இருவரின் ரத்த அழுத்தத்தை சோதித்திருந்தால், இயந்திரமே நிலைகுலைந்திருக்கும்.

கடைசி வரை இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்ளாமல் வந்துவிட்டார்கள் என்பதை நினைத்ததும், இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

ஷீலா அவர்களுடைய கண்கட்டுகளை அவிழ்த்தாள். கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, இருவரும் இறங்கியதும், ஷீலா இருவரையும் சின்னச்சின்னதாக அணைத்து, “வாழ்த்துகள்..! தைரியமா ஜெயிச்சிட்டீங்க..!” என்றாள்.

“இனிமே அருணைத் தொடலாமா..?” என்று பூர்ணிமா கேட்டாள்.

“இனிமே என்ன வேணாலும் பண்ணலாம்..” என்று ஷீலா கண்ணடித்துச் சொன்னாள்.

ஷீலாவை உதறிவிட்டு, பூர்ணிமா அருணின் மீது பாய்ந்து இறுகக் கட்டிக்கொண்டாள்.

“இன்னொரு போட்டிக்கு அவசியமில்லாம இந்தப் போட்டியிலயே முடிவு சொல்ல முடியும்..” என்றாள் ஷீலா.

தோற்றுப்போன இளைஞர்கள், கண்கள் கலங்கி, சற்றே விசும்பியபடி, இவர்களுக்குக் கைகொடுத்து வாழ்த்தினார்கள்.

“நாளைக்குக் காலைல எங்க கம்பெனிலேர்ந்து உங்களைக் கூட்டிட்டுப் போய் உங்க கிரவுண்டு எங்க இருக்குன்னு காட்டுவாங்க.. அதுக்கப்புறம் சட்டபூர்வமா பத்திரம் உங்களுக்கு மாத்தி எழுதி பதிவு செய்யப்படும்..” என்றாள் ஷீலா.

“இது கனவில்லையே..!” என்று பூர்ணிமா உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டாள்.

“கனவுதான்.. இதுதானே உன் கனவு, பூர்ணிமா..? முதல் கட்டத்தைத் தாண்டிட்டோம்..”

இருவர் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஒளிர்ந்தது.

“நாளைக்கு மாலை ஒரு சின்ன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.. அதுல உங்களுக்கு இந்த பரிசைக் கொடுப்போம்..!” என்றாள் ஷீலா.

***

அன்று இரவு அவர்கள் படுக்கையறையில் விளக்குகள் வழக்கத்தைவிட சீக்கிரமே அணைந்தன.

***

மறுநாள் அவர்களை தொலைக்காட்சி நிறுவனத்தின் கார் வேளச்சேரிக்குக் கூட்டிச் சென்றது. அவர் களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலம் காட்டப்பட்டது.

“ரொம்ப அதிகமா மழை பெய்ஞ்சா, கொஞ்சம் இங்க தண்ணி தேங்கும். மற்றபடி இது சூப்பர் இடம். ெரயில் நிலையமும், பேருந்து நிலையமும் பக்கத்துலயே இருக்கு..” என்றாள், கூட வந்த ஷீலா.

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..” என்றாள் பூர்ணிமா.

“எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..” என்றான் அருண்.

“நீச்சல் கத்துக்கங்க, போட்டிக்குத் தேவைப்படும்னு சொன்னீங்க.. ஆனா, கடைசிவரைக்கும் அப்படியொரு போட்டியே வரல..?”

“கடைசியா இன்னொரு போட்டி இருந்திருக்கணும்.. அது கடுமையான நீச்சல் போட்டியா இருக்கறமாதிரி திட்டமிட்டிருந்தோம்.. உங்க அதிர்ஷ்டம் அந்தப் போட்டிக்கு அவசியமில்லாம, இந்தப் போட்டி யிலயே எல்லாரும் விலகிட்டாங்க..” என்றாள் ஷீலா.

***

மாலை பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒரு சிறிய அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் தவிர, நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், பார்வையாளர்கள் என்று பலரும் கூடி யிருந்தார்கள்.

அருண்-பூர்ணிமா ஜோடி புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர். முதல் வரிசையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

“ஹலோ..!” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் அருண்.

“வாழ்த்துகள்..!” என்று தனக்குக் கைகொடுத்த இளைஞனை அருண் சற்றே குழப்பத்துடன் பார்த்தான். ‘இவனை எங்கே பார்த்திருக்கிறோம்..?’ என்று ஒரு கணம் யோசனை ஓடியது.

“என் ஒய்பைதான் ஞாபகம் வெச்சுப்பீங்களா..? என்னை ஞாபகம் வெச்சுக்க மாட்டீங்களா..?” என்று அவன் விளையாட்டாகக் கேட்டாலும், அருண் முகம் சற்றே சுருங்கியது.

“நீங்க”

“கார்த்திக்..! முத்ராவை கல்யாணம் பண்ணிக்கப்போறவரு..” என்றான்.

“முத்ராவுக்கு ஆபீஸ்ல கொஞ்சம் முக்கியமான வேலை. வாழ்த்துகளை தெரிவிக்கச் சொன்னா..!”

“தேங்க்ஸ்..” என்று பூர்ணிமா அந்த உரையாடலை வெட்ட முனைந்தாள்.

கார்த்திக் தன் சட்டைப்பையிலிருந்து தன் முகவரி அட்டையை எடுத்து நீட்டினான்.

“நீங்க ஒருவேளை வீடு கட்டற ஐடியால இருந்தா, எனக்கு போன் பண்ணுங்க.. எங்க அண்ணி சிமெண்ட் கம்பெனில பெரிய பதவில இருக்காங்க.. தள்ளுபடி விலைல உங்களுக்கு சிமெண்ட் கிடைக்க ஏற்பாடு பண்ண முடியும்..”

பூர்ணிமாவின் முகத்தில் இப்போது நட்பான புன்னகை மலர்ந்தது.

“நிகழ்ச்சி முடிஞ்சதும், நாம பேசுவோம்..” என்றாள்.

-தொடரும்

மேலும் செய்திகள்