லஞ்சப்புகார்: அதிகாரியை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு
லஞ்சப்புகாரில் சிக்கிய அதிகாரியை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
சென்னை,
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி(இ.பி.எப்.) பங்குத் தொகையை செலுத்தாதது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனியார் கல்வி நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றதாக வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் துர்காபிரசாத் மீதும், உடந்தையாக இருந்ததாக அதிகாரி ஏழுமலை மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தனக்கும், அந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் ஏழுமலை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘அதிகாரி துர்காபிரசாத் லஞ்சம் வாங்கும்போது ஏழுமலை உடன் இருந்தார் என்று அப்ரூவராக மாறியவர் சாட்சியம் அளித்துள்ளார். லஞ்சம் வாங்க ஏழுமலை உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.