பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா ஏற்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார்

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்.

Update: 2018-03-31 22:20 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சத்தியமங்கலம் பகுதியில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவிலில் குழிக்கம்பம் சாட்டப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்குவார்கள். இதையொட்டி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் செயல் அதிகாரி பழனிக்குமாரிடம் பக்தர்களுக்கு வேறு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்பது குறித்து கேட்டறிந்ததுடன், ஆலோசனைகளும் வழங்கினர். அதுமட்டுமின்றி அவர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பந்தல்களையும் பார்வையிட்டார். பின்னர் அவர் பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தார். ஆய்வின்போது கலெக்டருடன், சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

நடைபயணம்

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தாளவாடி, தலமலை, கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடைபயணமாக வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டு உள்ளன. 

மேலும் செய்திகள்