ஆசனூர் அருகே சுற்றுலா பயணிகளை விரட்டிய ஒற்றை யானை
ஆசனூர் அருகே சுற்றுலா பயணிகளை யானை ஒன்று விரட்டியது
பவானிசாகர்,
சத்தியமங்கலம் வனப்பகுதியில் மான், சிறுத்தை, புலி, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி கிராமப்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வனத்துறை சார்பில் ஆசனூர் அருகே யானைகள் தண்ணீர் குடிக்க வசதியாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை யானைகள் வந்து குடித்து தாகம் தீர்த்து செல்கின்றன. அதன்படி நேற்று ஒற்றை ஆண் யானை தண்ணீர் குடிக்க வந்தது.
சுற்றுலாப்பயணிகளை விரட்டியது
இந்த யானை தண்ணீர் குடித்து விட்டு தமிழக- கர்நாடக எல்லையான ஆசனூர் அருகே உள்ள ரோட்டை நேற்று மாலை 6.15 மணி அளவில் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
சாலையை யானை கடப்பதை பார்த்ததும் தங்களுடைய வாகனத்தை அவர்கள் நிறுத்தினார்கள். ஆனால் திடீரென அந்த யானை வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி ஓடினார்கள்.
யானை சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எனினும் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அந்த ஆண் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது.