சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வாக்கு சேகரித்தார் வருணாவில் மகனுக்கு ஆதரவு திரட்டினார்

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் வருணா தொகுதியில் தனது மகன் யதீந்திராவுக்கு ஆதரவு திரட்டினார்.;

Update: 2018-03-31 22:15 GMT
மைசூரு,

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் வருணா தொகுதியில் தனது மகன் யதீந்திராவுக்கு ஆதரவு திரட்டினார்.

வருணா தொகுதி

மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வருகிற தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுகிறார். அவர் கடந்த 2 நாட்களாக அங்கு பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து பொழுதுபோக்கினார்.

இந்த நிலையில் நேற்று காலை சித்தராமையா மைசூருவுக்கு திரும்பினார். அவர் காலையில் மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிற்றூண்டி சாப்பிட்டார். பின்னர் வருணா தொகுதியில் உள்ள தனது சொந்த ஊரான சித்தராமனஉண்டி கிராமத்திற்கு சித்தராமையா சென்றார். அவருக்கு ஊர் பொதுமக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அவர் வீடு, வீடாக சென்று தனது மகன் யதீந்திராவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பின்னர் சித்தராமையா தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னதாக அவருக்கு காங்கிரசாரும், பெண்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்


முன்னதாக சித்தராமனஉண்டி கிராமத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான் இந்த தடவை போட்டியிடுகிறேன். நான் கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் கருத்துகளை கேட்பேன். மேலும் வாக்கும் கேட்பேன். இதற்காக இன்னும் 3 நாட்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மதவெறி பிடித்தவர். அவரே ஒரு பயங்கரவாதி தான். அவர் பற்றி நான் அதற்கு மேல் எதுவும் கூறமாட்டேன்.

வருணா தொகுதியில் எனது மகன் யதீந்திராவை எதிர்த்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிட்டாலும் கவலை இல்லை. தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்