கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜனதா காலூன்ற கதவு திறக்கும் அமித்ஷா பேட்டி

கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜனதா காலூன்ற கதவு திறக்கும் என்று மைசூருவில் அமித்ஷா பேட்டி அளித்தார்.

Update: 2018-03-31 21:30 GMT
மைசூரு,

கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜனதா காலூன்ற கதவு திறக்கும் என்று மைசூருவில் அமித்ஷா பேட்டி அளித்தார்.

அமித்ஷா பேட்டி

2 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வந்தார். அவர் பழைய மைசூரு பகுதியில் பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார்.

நேற்று காலை அவர் மண்டியா, ராமநகர், மைசூரு ஆகிய இடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக மைசூருவில் அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவால் மட்டுமே முடியும்

கர்நாடக மக்கள் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள். கர்நாடகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் புரையோடி கிடக்கிறது. இதனால் இந்த அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இங்கு பிரதான பிரச்சினையாக ஊழல் உள்ளது. காங்கிரசும், ஊழலும் மீனும், தண்ணீரும் போல ஒன்றிணைந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஊழல் செய்வதற்காக கர்நாடக அரசை ‘ஏ.டி.எம்.‘ போல பயன்படுத்தி வருகிறது. இது தான் சித்தராமையா அரசின் சாதனையாகும்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது. அக்கட்சி வேண்டுமென்றால் சில இடங்களில் வெற்றி பெறும். ஆனால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவதுடன், கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் ஆற்றல் பா.ஜனதாவுக்கு மட்டுமே உள்ளது. சித்தராமையா தலைமையிலான அரசு அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக கூறுகிறது. பெங்களூரு வருவாய் ஈட்டும் பகுதியாக உள்ளது. ஆனால் பெங்களூருவை சிறிய நகரமாக மாற்றிவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் பா.ஜனதா...

மாநிலத்தில் இதுவரை 3,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் இதனை சித்தராமையா ஒருபொருட்டாக கருதவில்லை. விவசாயிகள் தற்கொலை சம்பவத்தை சிறிய விஷயமாக எடுத்துக்கொண்டார். எனது அரசியல் வாழ்க்கையில் விவசாயிகள் தற்கொலை பற்றிய பொறுப்பு இல்லாமல் பேசியவர் சித்தராமையா மட்டுமே.

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கியது காங்கிரசின் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே ஆகும். இதை ஏன் அவர் முன்கூட்டியே செய்யவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கிய நேரத்தில் இந்த விவகாரத்தை சித்தராமையா கையில் எடுத்தது ஏன்?. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் முடிவுகள் வெவ்வேறு மாதிரி இருக்கும். அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைகளை பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். கர்நாடகத்தில் வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைப்பது உறுதி. கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னிந்தியாவில் பா.ஜனதா காலூன்ற கதவு திறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்