நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்: 26 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-31 23:30 GMT
புதுச்சேரி,

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதற்காக அவர்கள் நேற்று மதியம் புதுவை ரெயில் நிலையம் அருகே காந்தி வீதியில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்திற்கு கட்சியின் மணவெளி, அரியாங்குப்பம் தொகுதி பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் மகளிர் பாசறை செயலாளர் கவுரி, கட்சியின் நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், கார்த்திகேயன், மதியழகன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் புதுவையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட தயாராக இருந்த ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 26 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்