‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி சாலையின் குறுக்கே சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் குறுக்கே சாய்ந்து இருந்த மின் கம்பத்தை சீரமைத்தனர்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர்-வியாசர்பாடி நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலையோரம் உள்ள மின்கம்பம் நேற்று முன்தினம் திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தவிர பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இது குறித்து நேற்று ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் குறுக்கே சாய்ந்து இருந்த மின் கம்பத்தை சீரமைத்தனர். அதில் அதிக அளவில் கட்டப்பட்டு இருந்த சில கேபிள் டி.வி. வயர்களையும் துண்டித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.