டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தேனி போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

சென்னையில், டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தேனி போலீஸ்காரர்கள் 2 பேரை பணி இடைநீக்கம் செய்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-03-31 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரர்களாக பணியாற்றிய கணேஷ், ரகு ஆகிய 2 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து, கணேஷ், ரகு இருவரும் கடந்த 21-ந்தேதி சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.

போலீஸ் அதிகாரிகள் சாதி ரீதியாக செயல்படுவதாக புகார் தெரிவித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இவர்கள் கடந்த பிப்ரவரி மாதமே தேனி மாவட்ட பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்று கைதான இருவர் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுப்பது தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமா? ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், போலீஸ் காரர்கள் கணேஷ், ரகு ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்