ஆபாச படங்கள் பார்ப்பதற்கு கம்பம் பகுதிக்கு இலவச அனுமதி அளித்த அமெரிக்க இணையதளம்: இளைஞர்களை சீரழிக்க நூதன திட்டமா?

ஆபாச படங்கள் பார்ப்பதற்கு கம்பம் பகுதிக்கு இலவச அனுமதியை அமெரிக்க இணையதளம் அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-03-31 22:00 GMT
தேனி,

பிரபலமான இணையதளங்கள் பலவும், தங்கள் தளத்தில் உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு அவர்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்து ஆபாச படங்களை அளிக்கின்றன. ஒரு சில இணையதளங்கள் இலவச அனுமதி அளிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இயக்கப்படும் பிரபலமான ஓர் ஆபாச இணையதளம் பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச அனுமதி அளிப்பதாக தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கும் அந்த ஆபாச இணையதளம் இலவச அனுமதியை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தங்களை ஆயுட்கால உறுப்பினராக சேர்த்துக் கொள்பவர்களுக்கு இலவச அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விவசாயிகள், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த திட்டம் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்படுவதாகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர்களை மையப்படுத்தி அவர்களை சீரழிக்கவும், போராட்டங்களில் ஏதும் ஈடுபடாத வகையில் அவர்களை இணையதளத்துக்குள் முடக்கிவைக்கும் திட்டத்தோடு இந்த இணையதளம் செயல்படுகிறதா என்ற சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்டபோது, ‘இதுபோல் பல ஆபாச இணையதளங்கள் உள்ளன. கம்பம் பகுதியை மையப்படுத்தி இப்படி ஓர் செயல்பாடு இருக்கும்பட்சத்தில் இதை தடை செய்ய சைபர் கிரைம் பிரிவு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சில இணையதளங்கள் இளைஞர்களை ஆசைகாட்டி ஏமாற்றி, உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டு பின்னர் பணம் கரக்கும் செயலிலும் ஈடுபடலாம். இதுபோன்ற தளங்களை நம்பி யாரும் அதில் உறுப்பினர் ஆகிவிட வேண்டாம்’ என்றார்.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேனி என்ற அடையாளத்துடன் பேஸ்புக்கில் ஏராளமான ஆபாச பக்கங்கள் செயல்பட்டு வந்தன. அதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட ஆபாச பக்கங்களை சைபர் கிரைம் பிரிவு மூலம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்