கோவில் திருவிழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மோதல்; 5 பேருக்கு கத்திக்குத்து

பிலிக்கல்பாளையம் அருகே கோவில் திருவிழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-31 22:15 GMT
பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த வினோதன் (வயது 28) என்பவர் எழுந்து நின்று ஆடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வினோதனை அமர்ந்து பார்க்குமாறு கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து வினோதன் ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (60), அவரது மகன் ராஜா (32), பாண்டியன் (38), பிரபு (28), அனந்தகுமார் (28) ஆகியோர் கண்டித்துள்ளனர்.

அப்போது வினோதனுக்கும், வெள்ளைச்சாமி உள்பட 6 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வினோதன், தனது நண்பர்களான கார்த்திக் (23), சசிக்குமார் (25) ஆகியோருடன் வெள்ளைச்சாமி, அவரது மகன் ராஜா, பாண்டியன், பிரபு, அனந்தகுமார் ஆகியோரின் வீட்டிற்கு சென்று 5 பேரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

தப்பி ஓட முயன்ற அவர்களை அக்கம்பக்கத்தினர் பிடித்து தாக்கினர். மேலும் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த வினோதனை சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த 5 பேரும் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய வினோதனின் நண்பர்கள் கார்த்திக், சசிக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்