காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டம் - வேல்முருகன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறியுள்ளார்.

Update: 2018-03-31 22:45 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் கொடுத்திருந்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதை பார்க்கும் போது தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது தெரியவருகிறது.

கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கலவரம் ஏற்படும், சட்டம்-ஒழுங்கு சீர்கெடும், பல உயிர்கள் பலியாகும் என மத்திய அரசு காரணம் கூறி இருக்கிறது. ஆனால் இது தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவே தமிழக வாழ்வுரிமை கட்சி கருதுகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி, சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்பது புரியவில்லை என்றும், மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டிருப்பதையும் கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபிறகும் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை ஏன் கண்டிக்கவில்லை. அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தமிழகம் இதுவரை காணாத அளவிற்கு மிகப்பெரிய போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஒன்றிணைய வேண்டும்.

கர்நாடக தேர்தலுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எவ்விதமான பிரச்சினை இல்லையென்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டியதில்லை.

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுடன் எவ்வித உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தண்ணீர் மற்றும் கனிம வளங்களை சேதப்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், பெட்ரோலிய மண்டலங்கள் அமைக்க அறிவிப்பது போன்ற செயல்கள் தமிழகத்தை மிகவும் பாதிக்கும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை உருவாகும்.

எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 2-ந் தேதி (அதாவது நாளை) சென்னையில் ஒத்தகருத்துடைய அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழ்தேச அமைப்புகளை ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்திட திட்டமிட்டுள்ளோம். போராட்டத்திற்கு தமிழக மக்கள் சாதி, சமய, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஆதரவு தர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு நாம் வரி செலுத்த தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் நாளை (இன்று) தமிழகம் முழுவதும் 45 சுங்கச்சாவடிகளில் வரிசெலுத்தாமல் வாகனங்களை இயக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். அடுத்தகட்டமாக மத்தியஅரசுக்கு சொந்தமான வருமான வரித்துறை அலுவலகம், விமான நிலையம் போன்ற அலுவலகங்களில் பூட்டுப்போடும் போராட்டம் நடத்துவோம். 3-ந் தேதி தமிழகம் முழுவதும் வர்த்தக சங்கங்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

இவ்வாறு வேல்முருகன் கூறினார். 

மேலும் செய்திகள்