காரைக்குடி அருகே பெண்ணை கொலை செய்து நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே வீடுபுகுந்து பெண்ணை கொலை செய்து நகைகளை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றுள்ளான்.

Update: 2018-03-31 21:30 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே திருச்சி–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தேத்தாம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அம்பல குருமூர்த்தி(வயது 40). இவருடைய மனைவி சாந்தி(35). இவர்களுக்கு சந்தோஷ்(7) என்ற மகன் உள்ளான். அம்பல குருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாந்தி தனது வீட்டில் மகன் சந்தோஷ், உறவினரின் மகள் பிரியா(12) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் சாந்தியின் வீட்டினுள் நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்தவுடன் அந்த நபர் கையில் வைத்திருந்த மயக்க மருந்தை சாந்தி மற்றும் பிரியா மீது அடித்து அவர்களை மயக்கமடைய செய்துள்ளார். சந்தோசை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் அந்த ஆசாமி, சாந்தி அணிந்திருந்த 11 பவுன் நகைகள், 3 பவுன் வளையல்களை கொள்ளையடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டினுள் பீரோவை திறந்து தேடியுள்ளார். அங்கு எதுவும் கிடைக்காததால் துணிகளை சிதறிவிட்டு தப்பியோடிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து சந்தோஷ் உறவினர்களை அழைத்துள்ளான். உறவினர்கள் வருவதற்குள் பிரியா மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாள். சாந்தி மயக்க நிலையிலேயே கிடந்தார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சாந்தி இறந்துபோனது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிநாடு போலீசார் மற்றும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. ஆனால் மயக்க மருந்து அதிகமாக அடிக்கப்பட்டதால் அவர் இறந்துபோனாரா அல்லது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனையிலேயே அது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்