புதுமாவிலங்கை ஊராட்சியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கிராம சேவை மைய கட்டிடம்
புதுமாவிலங்கை ஊராட்சியில் 3 ஆண்டுகளாக கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஓன்றியத்திற்கு உட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014-2015-ம் ஆண்டு அந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 14 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் புதிய கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரையிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படாமல் பூட்டி உள்ளது.
கோரிக்கை
இதனால் இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே அந்த கிராமசேவை மைய கட்டிடத்தை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக திறந்து வைக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.