மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதி 9-ம் வகுப்பு மாணவர் பலி

மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது யார்? என போட்டியில் 9-ம் வகுப்பு மாணவர், சாலையோர தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-03-31 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சதீஷ் (வயது 15). இவர், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வானகரம், கணபதி நகரைச் சேர்ந்தவர் சிவஹரிஸ்ரீராம் (17). இவரும், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது யார்? என நண்பர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

தடுப்பு சுவரில் மோதி பலி

போட்டியில் வெற்றிபெறும் நோக்கத்தில் இருவரும், ஒருவரை ஒருவர் முந்தியபடி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. போரூர் ஏரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன.

இதில் இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்தனர். இதில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பர் படுகாயம்

அவரது நண்பரான சிவஹரிஸ்ரீராம் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் பலியான சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்