மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்று காலாவதியானது: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய சான்று நேற்றுடன் காலாவதியானது.

Update: 2018-03-31 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய சான்று நேற்றுடன் காலாவதியானது. கிராம மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் ஆலையை இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி மீண்டும் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த ஆலையால் அந்த பகுதியில் நிலம், நீர் காற்று, மாசு அடைவதாகவும், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வந்துள்ளதாகவும் கூறி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஆலை விரிவாக்கம் பணி நடைபெற அரசு அனுமதி வழங்கியதாக தெரிகிறது. எனவே ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது என்று கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் களது போராட்டம் நேற்று 48-வது நாளாக நடந்தது. போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்


இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பராமரிப்பு பணிக்காக தாமிர உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியானது கடந்த 26-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி சான்று நேற்றுடன் (31-ந் தேதி) முடிவடைந்தது. மீண்டும் ஆலையை இயக்க வேண்டும் என்றால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ஆலையை இயக்குவதற்கான அனுமதி சான்றை புதுப்பிக்க வேண்டும்.

அனுமதி கிடைக்குமா?

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள், போராட்டக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுங்கத்துறையிடம் மனு

இதுதொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் பகுதி செயலாளர் எட்வின்பாண்டியன், வக்கீல் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் வ.உ.சி. துறைமுகம் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு சுங்கத்துறை ஆணையரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிர தாது ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்து உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சான்று

இந்த நிலையில் தொழிற்சாலைக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் நீர், நிலம் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின்படி சான்று கொடுக்கப்படும். இந்த சான்று இருந்தால் மட்டுமே தொழிற்சாலையை இயக்க முடியும். இந்த சான்று ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட சான்று 31-3-18 அன்று முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில் அந்த சான்றை புதுப்பிக்க கூடாது என்று வலியுறுத்தி மாசுகட்டுப்பாட்டு வாரியம், கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம். அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் புதுப்பிக்க மனு கொடுத்து உள்ளது. ஆனால் இதுவரை அந்த சான்று புதுப்பிக்கப்படவில்லை. இதனால் ஆலை தகுந்த சான்று இல்லாமல் இயங்க முடியாது. ஆகையால் இந்த ஆலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து சான்று பெறும் வரை கப்பலில் வந்து உள்ள தாமிர தாதுவை இறக்குவதற்கு அனுமதிக்க கூடாது.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்