நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்

அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-03-31 22:45 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் ஊர்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நார்த்தாமலையில் வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்தது.

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு அனுமதி வழங்கினர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட 671 காளைகளை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தபின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மிரட்டிய காளைகள்

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முன்வரவில்லை. அதன் பின்னர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 671 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷமாக மின்னல் வேகத்தில் வாடிவாசல் வழியாக சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

11 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித் தள்ளியதில் மாடுபிடி வீரர்கள் ஆறுமுகம் (வயது 25), விஜயக்குமார் (27), விஜய் (21), பார்வையாளர்கள் செந்தில் (35), குமார் (27), மணிவேல் உள்பட மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் 7 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆறுமுகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, விளத்துப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் பாலவேல்முருகேசன், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், வழக்கறிஞர் விளத்துப்பட்டி இளங்கோவன் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

பரிசுகள் வழங்கப்படவில்லை

ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நிபந்தனைகளின் படி முறையாக நடைபெறுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை நார்த்தாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் எந்த விதமான பரிசு பொருட்களும் வழங்கப்படவில்லை. இதனால் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

மேலும் செய்திகள்