இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரணி மத்திய அரசை கண்டித்து நடந்தது

மாநில மாநாட்டையொட்டி மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து பேரணி நடந்தது.

Update: 2018-03-31 22:30 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் நிறைவாக மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. முன்னதாக மன்னார்குடி தேரடியில் தொடங்கிய பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, முன்னாள் எம்.பி. செல்வராசு, மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் வழி நடத்தி அழைத்து சென்றனர்.

பேரணியில் சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பாரதமாதா வேடமிட்ட ஒருவரை சுற்றி தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ்மோடி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வது போலவும், விவசாயிகள் தட்டை ஏந்தி பிச்சை எடுப்பதுபோலவும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் வேனில் நின்றபடி வேடமிட்டு வந்தனர்.

இந்த பேரணி மன்னார்குடி பகுதியை கடந்து செல்ல ஒரு மணி நேரம் ஆனது.

காவிரி மேலாண்மை வாரியம்

பேரணியில் வந்த கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வருவதை கண்டித்தும், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து நடப்பதை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

பேரணி மன்னார்குடி பெரியக்கடைத்தெரு, பந்தலடி, காந்திரோடு, அரசு மருத்துவமனை வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் பின்லேபள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. 

மேலும் செய்திகள்