2 கால்களையும் இழந்தவரை கரம்பிடித்த காதலி

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 கால்களையும் இழந்த காதலனை அவரது காதலி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டார். நெகிழ்ச்சியான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

Update: 2018-03-31 23:30 GMT
வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது ஊட்டியை அடுத்த மசினகுடியை சேர்ந்த சில்பா (23) என்ற பெண்ணும் அதே கல்லூரியில் படித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலை தேடி பெங்களூருவுக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். படிக்கட்டு அருகே நின்றவாறு சென்ற அவர் பங்காருபேட்டை அருகே ரெயில் சென்றபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் 2 கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறிய விஜய் அதன்பின் கோவைக்கு திரும்பவில்லை. அவரை பார்க்க முடியாமல் காதலி சில்பா, தவியாய் தவித்தார். தோழிகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது விஜய் ரெயில் விபத்தில் கால்களை இழந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனிடையே சில்பாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர்.

ஆனால் அதனை சில்பா ஏற்காமல் தன்னந்தனியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இங்கு தனது காதலன் விஜய் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வருவதை பார்த்து கதறினார். அவருக்கு ஆறுதல் கூறிய சில்பா, உன்னையே திருமணம் செய்து கொண்டு உனக்கு துணையாய் இருப்பேன் என கூறினார். நான் நடமாட முடியாத நிலையில் உள்ளேன். இனி எனது வாழ்க்கையே கேள்விக்குறிதான். எனவே என்னை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டு உனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பார்த்து வாழ்க்கையை அமைத்துக்கொள் என விஜய் அறிவுரை கூறினார்.

ஆனால் நான் உன்னையே நினைத்து உன்னோடுதான் வாழ வேண்டும் என முடிவு செய்து விட்டேன் என கூறி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.

அவர்களது திருமணம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலேயே நேற்று நடந்தது. சில்பாவின் கழுத்தில் தாலி கட்டி அவரை விஜய் திருமணம் செய்து கொண்டார். அவர்களை அங்கிருந்த டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பணியாளர்கள் வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்