சசிகலா, பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு சென்றார்

கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த சசிகலா பரோல் முடிந்ததால் மீண்டும் பெங்களூரு சிறைக்கு தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

Update: 2018-03-31 23:15 GMT
தஞ்சாவூர்,

சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கணவர் இறந்த செய்தி பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தனது கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது. மூன்று முக்கிய நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அவருக்கு அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து அன்று இரவே அவர் தஞ்சைக்கு காரில் புறப்பட்டு வந்தார். அங்கு கணவரின் உடலைப்பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள், பல்வேறு கட்சியினர் ஆறுதல் தெரிவித்தனர்.

கடந்த 21-ந் தேதி தஞ்சை விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சிறைத்துறையினர் விதித்த நிபந்தனைப்படி தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் ம.நடராஜன் வீட்டிலேயே சசிகலா தங்கியிருந்தார்.

அவர் வெளியில் எங்கும் செல்லவில்லை. ம.நடராஜனுக்கு செய்யவேண்டிய இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

நேற்று முன்தினத்துடன் பரோல் காலம் முடிவடைந்ததால் நேற்று காலை பெங்களூருவுக்கு புறப்பட சசிகலா தயாரானார். அந்த நேரத்தில் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள தனியார் இல்லத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் 10 பேர், சசிகலா தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பாய், தலையணைகளை சசிகலா வழங்கினார்.

பின்னர் காலை 8.50 மணிக்கு சசிகலா காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். அவர் காரின் முன் சீட்டில் அமர்ந்து இருந்தார். பின் சீட்டில் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். சசிகலா சென்ற காரை தொடர்ந்து ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றன.

15 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் நிம்மதி இழந்து முன் கூட்டியே பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து சசிகலாவின் தம்பி திவாகரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

நாங்கள் எனது சகோதரி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டோம். ஆனால் 10 நாட்கள் தான் பரோல் தந்தார்கள். எனது அத்தான் நடராஜனின் நெருங்கிய நண்பர் கே.என்.நேரு. நடராஜன் இறந்த அன்று அவரால் வர முடியாததால் இன்று(நேற்று) சசிகலாவை சந்தித்து ஆறுதல் அளிக்க வந்தார். மற்றபடி அவரது சந்திப்பில் எந்தவித அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஆளும்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மறைமுகமாக சசிகலாவிடம் தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் கூறினர். தங்களது பதவி பறிபோய்விடும் என்பதற்காக அவர்கள் நேரடியாக சசிகலாவை சந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மதியம் 3.50 மணியளவில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை வந்தடைந்தார். பின்னர் அவர், காரில் இருந்து இறங்கி சிறைக்குள் சென்றார். அங்கு அவருக்கு முதலில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, அவரது அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மாலை 4.30 மணியளவில் டி.டி.வி.தினகரன், வக்கீல்களும் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தனர்.

மேலும் செய்திகள்