73 கடைகள் அகற்றப்படுவதால் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்

73 கடைகள் அகற்றப்படுவதால் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் நாகர்கோவில் நகராட்சி ஆணையரிடம் மனு

Update: 2018-03-31 22:45 GMT
நாகர்கோவில்,


நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமான நயினார் காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த கட்டிடத்தில் 73 கடைகள் செயல்படுகின்றன. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை இடித்து அகற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடைகளையும் வியாபாரிகள் காலி செய்து வருகின்றனர். இதற்காக கடைகளில் உள்ள தங்களுக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்கின்றனர்.

இதற்கிடையே நகராட்சி வியாபாரிகள் சங்க தலைவர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணனுடன் வந்து நகராட்சி ஆணையர் சரவணக்குமாரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நாங்கள் நயினார் காம்ப்ளக்சில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருகிறோம். இந்த கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நயினார் காம்ப்ளக்சில் செயல்பட்ட 73 கடைகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். அதன் பின்னரே கட்டிடத்தை அகற்ற வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்