பிறவியிலேயே பார்வை குறைபாடு இருந்த 2 சிறுமிகளுக்கு அறுவை சிகிச்சை

பிறவியிலேயே பார்வை குறைபாடு காணப்பட்ட 2 சிறுமிகளுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நடத்திய அறுவை சிகிச்சையின் மூலம் இருவருக்கும் பார்வை கிடைத்துள்ளது.;

Update: 2018-03-31 22:30 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரிடேம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது மகள் பிரியாவுக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருந்தது. பல இடங்களில் சிகிச்சை செய்தும் கண்பார்வை கிடைக்காததால் பெற்றோர் தங்களது மகளின் வாழ்வு இருண்டு விட்டதே என கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில் நாட்டறம்பள்ளி வட்டார சுகாதார ஆய்வாளர் மருதவாணன் தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் சுகாதார கணக்கெடுப்பு குறித்த பணியில் ஈடுபட்டனர். அப்போது முருகேசனின் மகள் பிரியாவுக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்தது. அது குறித்து அவர் நாட்டறம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் சுமதிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து பிரியாவை அவரது பெற்றோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர். கண் மருத்துவ நிபுணர் சத்யராஜ்நேசன் தலைமையிலான குழுவினர் பரிசோதித்தனர். அப்போது அறுவை சிகிச்சை மூலம் பார்வை குறைபாட்டை சரி செய்யலாம் என பிரியாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை மருத்துவ அலுவலர் உஷாஞானசேகரனுக்கு அது குறித்து பரிந்துரைக்கப்பட்டடது.

இதேபோல் ஆம்பூரை சேர்ந்த பயாஸ் என்பவரது மகள் நீனாஅஞ்சும் (6) என்ற சிறுமியும் பிறவியிலேயே பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தாள். இதனையடுத்து நீனாஅஞ்சுமிற்கும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இருவருக்கும் நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் உஷாஞானசேகரன் முன்னிலையில் கண்மருத்துவ நிபுணர் சத்யராஜ்நேசன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் 2 சிறுமிகளுக்கும் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

அவர்கள் தங்கள் பெற்றோரையும், தங்களுக்கு பார்வை கிடைக்க செய்த டாக்டர்களையும் பார்த்து பேசுகின்றனர். இதனால் வாழ்க்கை இருண்ட நிலையில் இருந்த 2 குழந்தைகளின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்வை கிடைத்து ஒளியேற்றிய டாக்டர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்