தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து விட்டார் - சுப.உதயகுமார் கண்டனம்

காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து விட்டார் என்று சுப. உதயகுமார் கூறினார்.

Update: 2018-03-30 23:30 GMT
புதுச்சேரி,

இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ். கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். தமிழ்மணி, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன், தமிழர் களம் செயலாளர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப. உதய குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் தமிழக மக்களை வஞ்சித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக தீர்ப் பளித்த பிறகும், கடைசி நேரம் வரை காத்திருந்து ‘ஸ்கீம்’ (திட்டம்) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று 8 கோடி தமிழர்களை முட்டாள் ஆக்குகிற மிக மோசமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த செயல் இந்திய தேசிய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் நல்லதல்ல.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையானது மண்ணை மலடாக்கி, கடல் நீரை நஞ்சாக்கி, காற்றை சுவாசிப்பதற்கு முடியாத தாக்கி அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது. மக்களை கடுகளவும் மதிக்காமல் ஆலையை விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.

கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆகிய திட்டங்கள் வேண்டாம் என்று மக்கள் போராடுகின்றனர். ஆனால், மத்திய அரசோ மக்களை மதிக்காமல் அந்த திட்டங்களை விரிவாக்க அனுமதி வழங்குகிறது. இந்த திட்டங்களை எதிர்க்காமல் விட மாட்டோம். என்ன நடந்தாலும் சரி, 8 கோடி தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். அரசு பன்னாட்டு நிறுவனங்களையும், பெருமுதலாளிகளையும் மட்டும் சிந்திக்காமல், நாட்டு மக்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்