காதலி கோபித்துக்கொண்டதால் என்ஜினீயரிங் மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை: “யாரும் காதலிக்காதீர்கள்” என உருக்கமான கடிதம்

காதலி கோபித்துக்கொண்டதால் விருத்தாசலம் அருகே ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். “யாரும் காதலிக்காதீர்கள்” என அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

Update: 2018-03-30 22:30 GMT
விருத்தாசலம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மணிமாறன் (வயது 24). இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை விருத்தாசலத்தை அடுத்த பூவனூர் அருகே, காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் தங்கராஜ் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தங்கராஜியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது தங்கராஜியின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதில் தங்கராஜியும், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தங்கராஜியுடன் வேறு மாணவிகள் பேசியதால், அவரது காதலி கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தார். இதனால் அவரது காதலிக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அவர்களது காதல் பற்றி வீட்டில் சொல்லவும் முடியவில்லை. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும் இனிமேல் யாரும் காதலிக்காதீர்கள் என்றும் அவர் கடிதத்தில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தங்கராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்