சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2018-03-30 22:25 GMT
சென்னிமலை,

சென்னிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6.15 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேரை 3 முறை வலம் வந்த பின்னர் சாமிகள் தேரில் அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மகா தரிசனம்

தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக தேரை காலை 7 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்புக்கு இழுத்து வந்து நிறுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மகா தரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.முருகையா, கோவில் செயல் அதிகாரி எம்.அருள்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்