திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி சாவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி இறந்தார். மேலும் காயமடைந்த 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-03-30 22:00 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய வீட்டில் கழிப்பறை கட்டும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(வயது 65), பலராமன் (48), மணிகண்டன் (30) ஆகிய தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறி ஒருவர் தேங்காய் பறித்தபோது அந்த தேங்காய் அருகே சென்ற மின்கம்பி மீது விழுந்ததில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது.

இதில் கழிப்பறைக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணன், பலராமன், மணிகண்டன் ஆகியோர் மீது மின்கம்பி விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனே அவர்கள் 3 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்