புதிய தமிழகம் கட்சி மாநாடு: ஆர்.ஆர்.நகரில் நடக்கிறது

புதிய தமிழகம் கட்சியின் மாநாடு மே மாதம் 6-ந்தேதி ஆர்.ஆர்.நகரில் நடக்கிறது. இதற்கான இடத்தை அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.

Update: 2018-03-30 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:- தேவேந்திர வேளாளர் அடையாளத்தை மீட்டு எடுக்கவும், பட்டியல் இனத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு பெறவும் விருதுநகர்-சாத்தூர் இடையே ஆர்.ஆர்.நகரில் வருகிற மே 6-ந்தேதி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக வச்சக்காரப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2-ந்தேதி இதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இந்த மாநாட்டிற்கு அனைத்து நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்பட உள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தேவேந்திர குலவேளாளருக்கு சலுகைகள் பற்றி இதுவரை பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களை மீட்டு எடுக்கவும், அவர்கள் பட்டியல் இனத்தில் இருந்து விலக்கு பெறவும் இந்த மாநாடு வழி வகுக்கும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. காவிரியில் நீர் பெறுவது என்பது டெல்டா பகுதி விவசாயிகளின் பிறப்புரிமையாகும். தமிழக அரசு அனைத்து கட்சியுடன் ஆலோசனை நடத்தியது. தற்போது அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 2-ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியை பொருத்தமட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசு சார்பில் கூட்டங்கள் நடத்தபட்டாலோ, போராட்டம் அறிவிக்கப்பட்டாலோ அதில் கலந்து கொள்ளும். தனித்தனியாக கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்களில் புதிய தமிழகம் கட்சி கலந்து கொள்ளாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டங்கள் நடத்துவதற்கு புதிய தமிழகம் கட்சிக்கு வலிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்