காங்கேயம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
காங்கேயம் அருகே பெற்றோர்கள் காதலை கண்டித்ததால் காதலர்கள் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
காங்கேயம்,
காங்கேயம் அருகே பெற்றோர்கள் காதலை கண்டித்ததால் காதலர்கள் தனித்தனியே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
காங்கேயம் அருகே உள்ள சத்திரவலசு பகுதியை சேர்ந்தவர் மூர்த்திராஜ். மெக்கானிக். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகள் சிலம்பரசி (வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் பஸ்சில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலம்பரசி மட்டும் வீட்டிற்குள் தனியாக தூங்கினார். பெற்றோர் இருவரும் வீட்டின் வெளிப்புறத்தில் வராண்டாவில் தூங்க சென்றனர். நேற்று காலை பூங்கொடி சமையல் செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது சிலம்பரசி வீட்டு உத்திரத்தில் சேலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனை பார்த்த பூங்கொடி அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் சிலம்பரசியை மீட்டு காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிலம்பரசியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் மூர்த்திராஜ் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் கலையரசன் (25). காங்கேயத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சிலம்பரசி தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்ததும், கலையரசனும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பெற்றோர்கள் கண்டிப்பு
விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கலையரசனும், சிலம்பரசியும் ஒரே சமூகத்தை சேர்ந்த உறவினர்கள் ஆவார்கள். இதனால் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவரம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரது பெற்றோரும் காதலை கண்டித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் சில மாதங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சமீப காலமாக இருவரது குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இனிமேல் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து வாழ முடியாது என மன வேதனையில் சிலம்பரசி தற்கொலை செய்துள்ளார். காதலி தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் மனமுடைந்த கலையரசனும் தற்கொலை செய்தது தெரியவந்தது.